வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வானிலை...

திசைக்கொன்றாய்ப்
பறக்கும் என்
நினைவுப்பள்ளங்களில்
ஆழ்குழிகளாய் உன்
நினைவலைகள்...
என் வான வீதியில்...
 
நீ
சிறிது விலகினால்க்கூட
என்னுள்
குறைந்த காற்றழுத்த
தாழ்வுமண்டலம்
உருவாகிவிடுகிறது...
 
சிலநேரம்
உனைக்கண்ட
பெருமிதத்தில்
தூறலாய்க் கொட்டுகிறது..
 
பலநேரம்
உன்னை நோக்கி
நகரமுற்பட்டு
இயலாமையால்
கண்ணீர்த் தூவுகிறது...
 
சிலநேரம் கோபத்தில்
அனலைக் கக்குகிறாய்..
புயலென உருவெடுக்கிறது...

சிலநேரம் 
இன்பப்புன்முறுவலில்
வாறியணைக்கிறாய்...
தணிந்துபோகிறது தாகம்...

உன் வருகை
அரிதான நேரத்தில்
வறண்டுபோய்ப்
புள்ளியடித்துக்
கானலாகிறது
இந்தப்பாலை...
 
வெப்பத் தகிப்பில்
வழியற்று விழிபிதுங்கும்
நிலத்தின் தேவையறிந்து
மழை வருவதில்லை...
நீயும் அப்படித்தான்...
 
அந்தப் பாதையோரத்
திருப்பத்தில் ஒரு
தாவணிச்சரிகை தெரிகிறது...
அது நீயாயிருக்கக் கூடுமென
உந்தித் தொலைகிறது மனம்...
 
அருகில் பட்டாம்பூச்சியொன்று
மென்மையாகத் தொட்டுவிட்டுப்
பறக்கிறது...
அதுவும் நீயோ....?
 
மழையென நீ
வருவாய் என
எண்ணித்தான்
உயிர்த்திருக்கிறது மனம்....
காத்திருக்கிறது தினம்...
 
வானிலை அறிக்கை
போன்றது உன் வருகை..
நீ வரக்கூடும்....
மென்மையாய் என்னைத்
தீண்டக்கூடும்...