செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பிழை..




துவட்டிக்கொள்ளவியலாதபடி

முழுக்க நனைகிறது இதயம்..

பளீரென பிளக்கும் உன்

பார்வை மின்னல்கள்..

கண்டபடி ரசித்துச் சிரிக்கும்

இந்த காதல் மழை..

உன்னுள் நனைந்தபடி

தப்பிப் பிழைக்கும் இந்த

பாழும் உயிர்...



வெண்பா... :

மின்னலைக் கண்டஞ்சா மாவீரர் பேரெழில்

மின்னலைக் கண்டஞ்சல் காண்....



மின்னலுக் கஞ்சா திதயம் மிரளுமே

மின்னலைப் பார்வை கண்டு..

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வானிலை...

திசைக்கொன்றாய்ப்
பறக்கும் என்
நினைவுப்பள்ளங்களில்
ஆழ்குழிகளாய் உன்
நினைவலைகள்...
என் வான வீதியில்...
 
நீ
சிறிது விலகினால்க்கூட
என்னுள்
குறைந்த காற்றழுத்த
தாழ்வுமண்டலம்
உருவாகிவிடுகிறது...
 
சிலநேரம்
உனைக்கண்ட
பெருமிதத்தில்
தூறலாய்க் கொட்டுகிறது..
 
பலநேரம்
உன்னை நோக்கி
நகரமுற்பட்டு
இயலாமையால்
கண்ணீர்த் தூவுகிறது...
 
சிலநேரம் கோபத்தில்
அனலைக் கக்குகிறாய்..
புயலென உருவெடுக்கிறது...

சிலநேரம் 
இன்பப்புன்முறுவலில்
வாறியணைக்கிறாய்...
தணிந்துபோகிறது தாகம்...

உன் வருகை
அரிதான நேரத்தில்
வறண்டுபோய்ப்
புள்ளியடித்துக்
கானலாகிறது
இந்தப்பாலை...
 
வெப்பத் தகிப்பில்
வழியற்று விழிபிதுங்கும்
நிலத்தின் தேவையறிந்து
மழை வருவதில்லை...
நீயும் அப்படித்தான்...
 
அந்தப் பாதையோரத்
திருப்பத்தில் ஒரு
தாவணிச்சரிகை தெரிகிறது...
அது நீயாயிருக்கக் கூடுமென
உந்தித் தொலைகிறது மனம்...
 
அருகில் பட்டாம்பூச்சியொன்று
மென்மையாகத் தொட்டுவிட்டுப்
பறக்கிறது...
அதுவும் நீயோ....?
 
மழையென நீ
வருவாய் என
எண்ணித்தான்
உயிர்த்திருக்கிறது மனம்....
காத்திருக்கிறது தினம்...
 
வானிலை அறிக்கை
போன்றது உன் வருகை..
நீ வரக்கூடும்....
மென்மையாய் என்னைத்
தீண்டக்கூடும்...

வியாழன், 21 ஜனவரி, 2010

பரிசு

உன்னைச்
சிந்திக்கச் சிந்திக்கத்
தித்திக்கிறது வாழ்க்கை...
என் வாழ்நாளின்
மிகக் குறுகிய
வினாடிகளைச்
சுமந்துவந்தவள் நீ...
உன்னைப்போய்
வாழ்நாள் முழுக்க
சுமந்து தொலைக்கிறது
இதயம்...
அந்த மழைக்கால
நாட்களில் நான்
உன்னோடு பின்னியிருந்த
சிற்சில மணித்துளிகள்
கண்களின்
பனித்துளிகள் போல
என் ஒவ்வொரு
இரவிலும் விடியும்வரை
பொழிந்து கொல்கிறது...
முத்தமிடத் துடிக்கும்
தாக இதழ்களுடன்
உன் ஸ்பரிசத்தின்
மோக அரவணைப்பில்
சிக்கித் தவித்த
வினாடிகள்...
தித்திக்கும் அந்த
நினைவுகளின்
சோக அரவணைப்பில்
தனிமையாய் நான்...
என் வறண்ட
தனிமையில்
உன் நினைவுகளைத்
தூறலாக்கி
மகிழ்கிறது மனம்...
மழைக்கென ஏங்கிச்
சுடுமூச்சு விட்டபடி
காய்ந்து கிடக்கும்
நிலம்
திடீரென பூரித்து
வாய்பிழப்பதுபோல்
உன் நினைவுகள்.....
இது பரிசா....?
தண்டனையா...?
தனிமையில்
வாடிக்கிடக்கும் மனம்
உன் நினைவுகளைப்
பரிசாகவே
ஏற்றுக்கொண்டு
ஆற்றிக்கொள்கின்றன...