செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வடு


நீ
நெருப்பைவிட
அழகானவள்...
கண்ணீரைவிட
ஆழமானவள்...

கவிதையை விட
கவின் மிகுந்தவள்
காதலைவிட
கனவு விதைப்பவள்...

பூ
பூக்கிறது
மணம் கமழ்கிறது....
வாழ்க்கை...

நீ
பூக்கிறாய் என்
மனம் கலைகிறது...
காதல்...

என்
நீர்த்துப்போன
நினைவுகளில் கூட
பூரித்துப்போய் உன்
நினைவு...

என்
முகவரிக்குள்
நுழைந்த உன்
'முக' வரியால்
காயமடைந்தேன்...

அகவரிகள் உன்
வனப்பில் வழியிழந்து...
விதியிழந்து
சுகவரிக்குள் மூழ்கி
சின்னாபின்னமாயின...

உன்
பல்வரிசையழகில் - என்
பல்நோக்கு முடக்கப்பட்டு
நல்நோக்குகள் அனைத்தும்
முள்நோக்காய்ப் போனது...

இப்படி உன்
'கைவரி'சையில் சிக்கி - என்
கைவரிகள் கர்வமின்றி
அழிந்துபோயின....

வரிகளைத் தொலைத்து
முகவரியற்றுத் தவிக்கிறது
இந்தக் கவிதை
என்னைப்போலவே...

வசந்தகாலத்தை
நினைந்துருகி
வாழும்காலம்
அணைந்து போனது...

பசுமைகளைக்
கொன்றுதின்னும்
இலையுதிர்க்காலமாய்
இன்றும் நாளையும்....

ஏக்கச் சருகுகளுடன்
தூக்கம் தொலைந்த என்
எதிர்காலம்
பூக்க மறுத்த உன்
புதிர்காலம்...

வேதனையையும்
கண்ணீரையும்
மட்டுமே அறிந்து
வெம்பிப் போயிருக்கிறது
என் கவிதை....

முடிந்துபோன நேற்றைய
பொழுதைப்போலவே
வடிந்துபோன நீராய் என்
வாழ்க்கை
நொடிந்துபோனது....

இன்னமும் இந்த
அற்ப உயிரின்
ஆறாத காயமாய்
உன் வடு...

திங்கள், 12 செப்டம்பர், 2011

தத்துவம்..


வார்த்தைகள் கண்ணீர்விட்டுக்
கதறியழும்போதுதான்
கவிதை பிறக்கிறது...

எந்த நெறிமுறைக்குள்ளும்
சிக்காமல்
எல்லா நெறிமுறைகளையும்
சிக்கலாக்கிவிட்டிருக்கிறது காதல்..

இதோ....
என் பாதையெங்கும்
அகலமறுக்கும் முள் மெத்தைகள்...
பதுங்கு குழிகளெனப்
பதுமையின் நினைவுகள்...

கனவு, கவிதை,
நினைவு, நிஜம்,
புனைவு, புதுமையென
சுமந்தும், சுவைத்தும்
துன்புற்றும், இன்புற்றும்
மகிழ்கிறது காதல்...

அதோ..
கண்ணெதிரே நீ நடந்து வரும்
அந்த அரூபப் பாதையில்தான்
சிந்தப்பட்டிருக்கின்றன....
மெல்லிய உன் பாதத்தை வருடியபடி
பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன...
இந்த வாழ்க்கைக்கான தத்துவங்கள்...

வாழ்வின்
வெவ்வேறு திசைகளில் தோன்றிய
வெவ்வேறு தத்துவங்களின் சாராம்சமாய்ப்
பொலி(ழி)ந்து தள்ளுகிறது காதல்...

தெளிவாக நுகரமுடிகிறது...
என் வாழ்க்கைக்கான
உன்னத தத்துவம் நீ...!
எவர் மனதும் புண்படாத
அழகிய தத்துவம் காதல்...!

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நாணம்...

ஆழமான என்
நினைவுப் பள்ளங்களில்
உன்னைச்
சேமித்து வைத்திருக்கிறது காதல்...

காதல் மகரந்தத்தைத்
தட்டிப்பறிக்கவென்றே
வண்டாய் ரீங்காரமிடுகின்றன
உன் விழிகள்...

புன்னகைக்கும் இமைகள்
படபடத்தபடி
விழிகளாலேயே பேசிவிடுகிறாய்...

நீ அறிந்தே இருக்கிறாய்...
பேசுவதற்காகவோ..
புன்னகைக்கவோ அல்ல...
முத்தமிட்டுக்கொள்ளவே
இதழ்கள் படைக்கப்பட்டிருக்கின்றன...

காதல் ஒரு 
வெட்கமற்ற மழை....
இடம், பொருள், ஏவலின்றி
இதயத்தை உந்தித் தொலைக்கிறது...
ஆனால் நீயோ
வெட்கமழையில்
முகம்மூட முனைகின்றாய்...

இனி நீ
எதைத்தான் மறைக்கமுடியும்...?
காதலைத்தான் அந்தக்
கருவண்டுகள் ரீங்காரமிட்டுவிட்டனவே....!

என் வாழ்நாளின்
இறுதிக்காலம் வரை நீ
என்பதை என்னால்
அறுதியிட்டுக்கூற முடியும்...

ஏனென்றால்
முற்றுப்பெறவே முடியாத
வார்த்தைகளை உள்ளடக்கிய
கவிதை நீ..........