நீ
நெருப்பைவிட
அழகானவள்...
கண்ணீரைவிட
ஆழமானவள்...
கவிதையை விட
கவின் மிகுந்தவள்
காதலைவிட
கனவு விதைப்பவள்...
பூ
பூக்கிறது
மணம் கமழ்கிறது....
வாழ்க்கை...
நீ
பூக்கிறாய் என்
மனம் கலைகிறது...
காதல்...
என்
நீர்த்துப்போன
நினைவுகளில் கூட
பூரித்துப்போய் உன்
நினைவு...
என்
முகவரிக்குள்
நுழைந்த உன்
'முக' வரியால்
காயமடைந்தேன்...
அகவரிகள் உன்
வனப்பில் வழியிழந்து...
விதியிழந்து
சுகவரிக்குள் மூழ்கி
சின்னாபின்னமாயின...
உன்
பல்வரிசையழகில் - என்
பல்நோக்கு முடக்கப்பட்டு
நல்நோக்குகள் அனைத்தும்
முள்நோக்காய்ப் போனது...
இப்படி உன்
'கைவரி'சையில் சிக்கி - என்
கைவரிகள் கர்வமின்றி
அழிந்துபோயின....
வரிகளைத் தொலைத்து
முகவரியற்றுத் தவிக்கிறது
இந்தக் கவிதை
என்னைப்போலவே...
வசந்தகாலத்தை
நினைந்துருகி
வாழும்காலம்
பசுமைகளைக்
கொன்றுதின்னும்இலையுதிர்க்காலமாய்
இன்றும் நாளையும்....
தூக்கம் தொலைந்த என்
எதிர்காலம்
பூக்க மறுத்த உன்
புதிர்காலம்...
கண்ணீரையும்
மட்டுமே அறிந்து
வெம்பிப் போயிருக்கிறது
என் கவிதை....
முடிந்துபோன நேற்றைய
பொழுதைப்போலவே
வடிந்துபோன நீராய் என்
வாழ்க்கைநொடிந்துபோனது....
அற்ப உயிரின்
ஆறாத காயமாய்
உன் வடு...