வெள்ளி, 13 நவம்பர், 2009

குடைக்குள் மழை...




கடவுள் என்னிடம்
என்ன வரம் வேண்டும் என்றான்
நான்
கவிதை வரம் கேட்டேன்...
அவன்
உன்னைத்தந்துவிட்டுப் போனான்...

மழைக்காலத்து
பெண்குயிலென நீ
வந்திருக்கிறாய்....
நான் நனைவதை
விரும்பியும் விரும்பாது
கூவுகிறாய்...

மழைமீது காதலால்
சொட்டச்சொட்ட நனைந்த
என் தலையை
தாவணிக் குடைகொண்டு
போர்த்த முயலுகிறாய்...
தாவணியையும் மீறி
தலைநனைக்கிறது மழை..
நனைவது காதல்........

கோபத்தில் தகித்துச்
சுடுவிழி நோக்குகிறாய்...
தாபத்தில் விக்கித்து
தொடுதலில் வியர்க்கிறேன்...

இனிக்க இனிக்க
நனைக்கிறது காதல்...
கூடவே நனைய
சில பட்டாம்பூச்சிகளும்....
இறக்கை விரித்தபடி
இங்கொன்றும் அங்கொன்றுமாய்...
இதழ்களில் தேன்சொட்ட
அமர்ந்திருக்கின்றன....
இறக்கைகளில் பட்டும்
படாமல் பனித்துளிபோல்
சிறுசிறு மழைத்துளி....
காதல்....

இப்பொழுதுசொல்...
என் நனைதலை நீயும்
விரும்புகிறாய்தானே....

என்னைத் தீண்ட

இதைக்காட்டிலும் இன்ப
தருணம் கிடைக்குமா என்ன..?

இப்பொழுது
இலையுதிர்க்
காலமென்றாலும்
மழை வருமென
காத்திருக்கிறேன்...
வானவில்லாய் உன்
தாவணி
குடை விரிக்குமென்று...?
இதற்குத்தான் இன்னமும்
மழைக்கென ஏங்குகிறேன்...

முத்தம்...


காதலின் மொழி
பெரும்பாலும்
மௌனம்தான்...

விழிகள் நான்கும்
மௌனத்தால் மட்டுமே
பேசிக்கொள்கின்றன..

காதலை ஒட்டுமொத்தமாய்த்
தேக்கிவைத்து
ஒற்றைப் பார்வையாலேயே
பொழிவிக்கிறாய்....
கற்றைகற்றையாய் பல
நினைவலைகளைப் பாய்ச்சி
கணைதொடுக்கின்றன விழிகள்...
மின்னலாய்... இடியாய்...மழையாய்...
நனைகிறது காதல்....

அமைதியாய் என்னைக்
காயப்படுத்தி விளையாடுகின்றன
உன் இதழ்களும்..
குவிந்திருக்கையில் அழகு...
இதழ்விரிக்கையில் பேரழகு...

நீ உதட்டுக்குச்
சாயமிடுவதில்லை
உன் இதழின்
சிவப்பெழிலை
ஒற்றி எடுத்தே
உதட்டுச்சாயம்
தயாரிக்கப்பட்டிருக்கிறது...

பல சமயங்களில்
இதழ்கள் நான்கும்
தங்கள் விரோதங்களை
மௌனமாய்ப்
பழிதீர்த்துக்கொள்கின்றன...

உன் கோபத்தின்
தாபங்களை
ஒற்றை முத்தத்தில்
இறக்கிவைக்கிறாய்...

அந்த ஒற்றை
முத்தத்தில் என்
சித்தம் கலங்கி
பித்துப்பிடித்து
அலைகிறேன்...

ஒவ்வொருமுறை நீ
இதழ்குவிக்கும்போதும்
கதகளியாடுகிறது மனது...

உன் முத்தத்தின்
மழைப்பொழிவில்
கிளர்ந்தெழுந்து
தீட்சை பெறுகின்றது
இந்தக்  காதலெனும்
இன்பத்தீ....

நெருப்பு





கருகிக்கொண்டிருக்கும் விட்டிலை
விளக்கு அறிவதில்லை...
உருகிக்கொண்டிருக்கும் 
இந்த இதயத்தை
உருக்கிக்கொண்டிருக்கும் நீ
அறியாததில் வியப்பொன்றுமில்லை...
 
உதடுகள்
மொழியாவிட்டால் என்ன?
உன் விழிகளே
மொழிகளைப்
படைக்கின்றன...
நேற்றோ நாளையோ
எப்போதாவதுதான் நீ
வருகிறாய்...
மின்னல் போல...
கண்டு மகிழ்கிறேன் ...
 
வரும்போது பார்வையாலேயே
நெருப்பை பொழிகிறாய்..
உளம் உருக நனைகிறேன்...
 
உன் சீற்றம்
விசித்திரமானது - அது
சுடு நெருப்பினால்
குளிரூட்டப்பட்ட
காதல் பரிசு...
 
கனல் கக்கும்
விழிகள் கண்டு
தணலாகிறது மனது...
 
ஏனோ..
நீ நெருப்பெனினும்
உன் பொழிதலுக்கு ஏங்கி
பட்டுப்போகக் காத்திருக்கும்
பயிரென நான்...
 
நீ
உமிழ்வது நெருப்பெனினும்
நனைவது காதல்...
 
இந்தக்
காதல் நெருப்பு
தொடர் மழையை விடக்
கோரமானது...
 
இதயம் முழுக்க
நனைந்து கருகுகிறது
உன் நெருப்பு மழை
தீண்டிய சுவடுகளாய்...

நீ வருவாயென...



வானம் கண்ணீர்
சிந்துகிறது...
மழை உருப்பெறுகிறது...
நான் கண்ணீர்
சிந்துகிறேன்..
கவிதை உருப்பெறுகிறது...
 
காரணம் நீதான்....
தோலுரிக்கப்பட்ட ஆடுபோல
தோரணம் கட்டப்பட்டது
செத்துப்போன இந்த உடல்...
 
என் மழைக்கால
நாட்களில் நீ
மேகமாய் வந்து
தேகம் நனைத்துப்போனாய்...
 
நீ பெய்தாய்..
நான் களித்தேன்..
நீ பொய்த்தாய்..
நான் புளித்தேன்...
கண்கள் பெய்தன
மழை...
 
உன் பார்வை
உச்சத்தில் பிரம்மைபிடித்து
பிச்சையெடுக்கிறது
என் காதல்...
இச்சையில் ஏங்கியே
துச்சமாகிப்போனது என்
மிச்ச இளமையும்
உன் ஸ்பரிசத்தால்...
 
உன் இதழ் படாமலேயே
எச்சமாகிப்போன
என் உயிரில்
மிச்சப்பட்டுப்போய் 
கொச்சையாக்கப்பட்டது
இந்த வாழ்க்கை...
 
நிச்சயமற்ற இந்த
சொச்ச உயிரும் உன்
உச்சத்திற்கு ஏங்கிப்போய்
நச்சரிக்கிறது....
 
நஞ்சை உண்டவனுக்கு
ஆயுள் சொற்பம் - காதல்
நஞ்சை உண்டவனுக்கும்
ஆயுள் சொற்பம்தான்...
 
மரணம்
சிதை மாற்றம்..
காதல்
வதை மாற்றம்...
 
மாற்றமொன்றுதான்
உலகமென உன் காதல்
பரிமாற்றத்திற்கென
இன்னமும்
காத்திருக்கிறது
வீணாகிப்போன என்
நிகிழ்காலம்...
 
உன் வரவினால்
மழைக்காலத்தில் தொடங்கியது
என்
பிழைக்காலம்...
 
உன்னைக் காதலித்ததுகூட
பிழையில்லை... ஆனால்
உன்னைக்கண்டது
என் முதல் பிழை...
அதுவே நான் செய்த
பெரும்பிழை...
 
உன் வருகைக்கென ஏங்கியே
புண்ணாகிப்
புரையோடிப்போனது வாழ்க்கை...
எல்லாம்
மண்ணாகிப்போனபின்னும்
மண்டியிட்டு வேண்டுகிறது காதல்...
நீ வருவாயென
உயிர் நனைப்பாயென...
(பெய்யும்...)

மழைச்சாபம்...

விதிகளை மறந்த
சதியாய் விகசித்து
சிதறிக்கிடக்கின்றன
வெவ்வேறு திசைகளில்
துளிகள்...

என்காதல்
வறுமையால் வாடுகிறது..
உன் மழை
இளமையாய்ச் சாடுகிறது...

உன்னை
நினைப்பதுகூட
எனக்கு
ஆடம்பரமானதுதான்..

அழுத்தம் சிறிதுமற்று
மென்மையாய்க் காதலை
விதைக்க
எங்கிருந்து பழகிக்கொண்டாய்..?

புதைந்துதான் போனத்
மனம் - உன்
காதலில் தாக்கத்தினுள்..

தொட்டும் தொடாமல்
உன் மேல்
பட்டுவிட்ட காரணத்தால்
திக்குத் தெரியாமல்
வழிந்தோடுகிறது
மழைத்துளி....

உன்னைத் தெரியாமல்
தீண்டிவிட்டுதில்
தத்தளிக்கிறது
மழைச்சாரல்...
என் மனதில் தூரல்...

உன் பார்வை மது
அருந்திய மயக்கத்தில்
பிரம்மித்து உளறுகிறது
இடி மின்னல்...

அந்த

அந்திமப் பொழுதின்

இனிய
மழைக்காலத்தில்
சந்திக்கிறேன் உன்னை...

நாட்தவறாமல்
அரும்பாடுபட்டு
இத்தனை வருடங்கள்
உறங்கியும் உறங்காமல்
வளர்த்துவந்தாள்
என் அன்னை...
வெறும் என்னை...

ஆனால் நீயோ..
சந்தித்த சிலநொடிகளில்
சிந்தைகெடுத்துப்போனாய்...
குறுகிய காலத்தில்
குழந்தைபோல ஆக்கிவிட்டாய்...

என் இதழ்கள்
தூங்கும்போதும்
உன் பெயரையே
உச்சரிக்கின்றன..
கிளிப்பேச்சு இப்படித்தானென்று...
இப்பொழுதுதான் உணர்ந்தேன்..
எண்ணத்தில் நீ என்று...

பொறாமை கொண்ட மழை
சாபமிட்டது - உன்
பார்வை மழை அதற்கு
தூபம்போட்டது...

குளமாகியது கண்கள்...
இடிமின்னல் இதயத்தில்
நீ தொலைதூரம் சென்றதில்
கண்ணீர்வடிக்கிறது
காதல் மழை...

கண்ணீரும் மழைதான்..
ஏன்? எதற்கு? என்று
விளிக்காமலேயே வருகிறது...
விழிமுழுக்க நனைகிறது...