செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
பிழை..
துவட்டிக்கொள்ளவியலாதபடி
முழுக்க நனைகிறது இதயம்..
பளீரென பிளக்கும் உன்
பார்வை மின்னல்கள்..
கண்டபடி ரசித்துச் சிரிக்கும்
இந்த காதல் மழை..
உன்னுள் நனைந்தபடி
தப்பிப் பிழைக்கும் இந்த
பாழும் உயிர்...
வெண்பா... :
மின்னலைக் கண்டஞ்சா மாவீரர் பேரெழில்
மின்னலைக் கண்டஞ்சல் காண்....
மின்னலுக் கஞ்சா திதயம் மிரளுமே
மின்னலைப் பார்வை கண்டு..
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
வானிலை...
திசைக்கொன்றாய்ப்
பறக்கும் என்
நினைவுப்பள்ளங்களில்
ஆழ்குழிகளாய் உன்
நினைவலைகள்...
என் வான வீதியில்...
நீ
சிறிது விலகினால்க்கூட
என்னுள்
குறைந்த காற்றழுத்த
தாழ்வுமண்டலம்
உருவாகிவிடுகிறது...
சிலநேரம்
உனைக்கண்ட
பெருமிதத்தில்
தூறலாய்க் கொட்டுகிறது..
பலநேரம்
உன்னை நோக்கி
நகரமுற்பட்டு
இயலாமையால்
கண்ணீர்த் தூவுகிறது...
சிலநேரம் கோபத்தில்
அனலைக் கக்குகிறாய்..
புயலென உருவெடுக்கிறது...
சிலநேரம்
இன்பப்புன்முறுவலில்
வாறியணைக்கிறாய்...
தணிந்துபோகிறது தாகம்...
உன் வருகை
அரிதான நேரத்தில்
வறண்டுபோய்ப்
புள்ளியடித்துக்
கானலாகிறது
இந்தப்பாலை...
வெப்பத் தகிப்பில்
வழியற்று விழிபிதுங்கும்
நிலத்தின் தேவையறிந்து
மழை வருவதில்லை...
நீயும் அப்படித்தான்...
அந்தப் பாதையோரத்
திருப்பத்தில் ஒரு
தாவணிச்சரிகை தெரிகிறது...
அது நீயாயிருக்கக் கூடுமென
உந்தித் தொலைகிறது மனம்...
அருகில் பட்டாம்பூச்சியொன்று
மென்மையாகத் தொட்டுவிட்டுப்
பறக்கிறது...
அதுவும் நீயோ....?
மழையென நீ
வருவாய் என
எண்ணித்தான்
உயிர்த்திருக்கிறது மனம்....
காத்திருக்கிறது தினம்...
வானிலை அறிக்கை
போன்றது உன் வருகை..
நீ வரக்கூடும்....
மென்மையாய் என்னைத்
தீண்டக்கூடும்...
வியாழன், 21 ஜனவரி, 2010
பரிசு
உன்னைச்
சிந்திக்கச் சிந்திக்கத்
தித்திக்கிறது வாழ்க்கை...
என் வாழ்நாளின்
மிகக் குறுகிய
வினாடிகளைச்
சுமந்துவந்தவள் நீ...
உன்னைப்போய்
வாழ்நாள் முழுக்க
சுமந்து தொலைக்கிறது
இதயம்...
அந்த மழைக்கால
நாட்களில் நான்
உன்னோடு பின்னியிருந்த
சிற்சில மணித்துளிகள்
கண்களின்
பனித்துளிகள் போல
என் ஒவ்வொரு
இரவிலும் விடியும்வரை
பொழிந்து கொல்கிறது...
முத்தமிடத் துடிக்கும்
தாக இதழ்களுடன்
உன் ஸ்பரிசத்தின்
மோக அரவணைப்பில்
சிக்கித் தவித்த
வினாடிகள்...
தித்திக்கும் அந்த
நினைவுகளின்
சோக அரவணைப்பில்
தனிமையாய் நான்...
என் வறண்ட
தனிமையில்
உன் நினைவுகளைத்
தூறலாக்கி
மகிழ்கிறது மனம்...
மழைக்கென ஏங்கிச்
சுடுமூச்சு விட்டபடி
காய்ந்து கிடக்கும்
நிலம்
திடீரென பூரித்து
வாய்பிழப்பதுபோல்
உன் நினைவுகள்.....
இது பரிசா....?
தண்டனையா...?
தனிமையில்
வாடிக்கிடக்கும் மனம்
உன் நினைவுகளைப்
பரிசாகவே
ஏற்றுக்கொண்டு
ஆற்றிக்கொள்கின்றன...
வெள்ளி, 25 டிசம்பர், 2009
மொ(மு)த்த காதலும்......
உன்னை நினைத்தாலே
என்னுள் துளிர்க்கிறதுதுள்ளலுடன் மகிழ்ச்சி...
மனதில் பெய்கிறது மழை...
அந்திமப்பொழுதின்
அர்த்தமிகு வெளிச்சத்தில்
அந்த மலைச்சாரலில்
சிறு மழைத்தூரல்...
நடந்து செல்கிறோம் நாம்
கடந்து செல்கிறோம்
சிலப்பல நூற்றாண்டுகளை....
உடைந்த நிலாவும்
ஒட்டாத சூரியனும்
முட்டாது நின்ற
மாலையில்
சிட்டாகப்பறக்கிறது
நம் சிறகுகள்....
சுதந்திரம் இன்னதென்று
சாலையில் போதித்தது
தந்திரத்துடன் மழைத்துளி....
இதுவரை நான் உன்னைத்
தீண்டியதில்லை - ஆனால்
நீ என்னைப்
பலமுறை தொட்டுப்பார்த்திருக்கிறாய்....
வானில் மின்னல்
மழை...
மனதில் மின்னல்
காதல்...
மின்னல் போல
பளீரிடுகிறாய்... உன்
பேரழகில் உறைந்து
வெளிரிப்போய் என் சருமம்....
சொட்டும் மழையில்
இதழ் சொட்டும் ஈரத்தில்
மூர்ச்சையாகிப்போனது
நான்தான்...
செவ்வாய்க்கிரகத்தில்
குடியேறுகிறது காதல்...
உன்
செவ்வாய்...?! கிறக்கத்தில்
அஸ்தமிக்கிறது
என் சூரியன்...
மொத்த காதலையும்
அள்ளித்தெளிக்கிறாய்...
முத்தம் கேட்ட வினாடிகளில்
மூச்சொறிந்து வெட்கத்தில்
இதழ்குவித்து
சத்தமின்றிப் புதைக்கிறாய்....
என் இதயத்தைப்
புதைகிறாய்....
மழையுடன்
மகிழ்ச்சியில் திளைந்த
அந்த மாலை...
இப்போது
விழிகளில் மழையுடன்...
உன் பிரிவு
ஏக்கத்தைக் கொடுக்கிறது...
என்
தூக்கத்தைக் கெடுக்கிறது....
மழை....
காதலை மட்டுமல்ல
கண்ணீரையும்
உலகுக்கு உரைக்கும்
கனல்......
வெள்ளி, 13 நவம்பர், 2009
குடைக்குள் மழை...
கடவுள் என்னிடம்
என்ன வரம் வேண்டும் என்றான்
நான்
கவிதை வரம் கேட்டேன்...
அவன்
உன்னைத்தந்துவிட்டுப் போனான்...
மழைக்காலத்து
பெண்குயிலென நீ
வந்திருக்கிறாய்....
நான் நனைவதை
விரும்பியும் விரும்பாது
கூவுகிறாய்...
மழைமீது காதலால்
சொட்டச்சொட்ட நனைந்த
என் தலையை
தாவணிக் குடைகொண்டு
போர்த்த முயலுகிறாய்...
தாவணியையும் மீறி
தலைநனைக்கிறது மழை..
நனைவது காதல்........
கோபத்தில் தகித்துச்
சுடுவிழி நோக்குகிறாய்...
தாபத்தில் விக்கித்து
தொடுதலில் வியர்க்கிறேன்...
இனிக்க இனிக்க
நனைக்கிறது காதல்...
கூடவே நனைய
சில பட்டாம்பூச்சிகளும்....
இறக்கை விரித்தபடி
இங்கொன்றும் அங்கொன்றுமாய்...
இதழ்களில் தேன்சொட்ட
அமர்ந்திருக்கின்றன....
இறக்கைகளில் பட்டும்
படாமல் பனித்துளிபோல்
சிறுசிறு மழைத்துளி....
காதல்....
இப்பொழுதுசொல்...
என் நனைதலை நீயும்
விரும்புகிறாய்தானே....
என்னைத் தீண்ட
இதைக்காட்டிலும் இன்ப
தருணம் கிடைக்குமா என்ன..?
இப்பொழுது
இலையுதிர்க்
காலமென்றாலும்
மழை வருமென
காத்திருக்கிறேன்...
வானவில்லாய் உன்
தாவணி
குடை விரிக்குமென்று...?
இதற்குத்தான் இன்னமும்
மழைக்கென ஏங்குகிறேன்...
முத்தம்...
காதலின் மொழி
பெரும்பாலும்
மௌனம்தான்...
விழிகள் நான்கும்
மௌனத்தால் மட்டுமே
பேசிக்கொள்கின்றன..
காதலை ஒட்டுமொத்தமாய்த்
தேக்கிவைத்து
ஒற்றைப் பார்வையாலேயே
பொழிவிக்கிறாய்....
கற்றைகற்றையாய் பல
நினைவலைகளைப் பாய்ச்சி
கணைதொடுக்கின்றன விழிகள்...
மின்னலாய்... இடியாய்...மழையாய்...
நனைகிறது காதல்....
அமைதியாய் என்னைக்
காயப்படுத்தி விளையாடுகின்றன
உன் இதழ்களும்..
குவிந்திருக்கையில் அழகு...
இதழ்விரிக்கையில் பேரழகு...
நீ உதட்டுக்குச்
சாயமிடுவதில்லை
உன் இதழின்
சிவப்பெழிலை
ஒற்றி எடுத்தே
உதட்டுச்சாயம்
தயாரிக்கப்பட்டிருக்கிறது...
பல சமயங்களில்
இதழ்கள் நான்கும்
இதழ்கள் நான்கும்
தங்கள் விரோதங்களை
பழிதீர்த்துக்கொள்கின்றன...
உன் கோபத்தின்
தாபங்களை
ஒற்றை முத்தத்தில்
இறக்கிவைக்கிறாய்...
அந்த ஒற்றை
முத்தத்தில் என்
சித்தம் கலங்கி
பித்துப்பிடித்து
அலைகிறேன்...
ஒவ்வொருமுறை நீ
இதழ்குவிக்கும்போதும்
கதகளியாடுகிறது மனது...
உன் முத்தத்தின்
மழைப்பொழிவில்
கிளர்ந்தெழுந்து
தீட்சை பெறுகின்றது
இந்தக் காதலெனும்
இன்பத்தீ....
நெருப்பு
கருகிக்கொண்டிருக்கும் விட்டிலை
விளக்கு அறிவதில்லை...
உருகிக்கொண்டிருக்கும்
இந்த இதயத்தை
உருக்கிக்கொண்டிருக்கும் நீ
அறியாததில் வியப்பொன்றுமில்லை...
உதடுகள்
மொழியாவிட்டால் என்ன?
உன் விழிகளே
மொழிகளைப்
படைக்கின்றன...
நேற்றோ நாளையோ
எப்போதாவதுதான் நீ
வருகிறாய்...
மின்னல் போல...
கண்டு மகிழ்கிறேன் ...
வரும்போது பார்வையாலேயே
நெருப்பை பொழிகிறாய்..
உளம் உருக நனைகிறேன்...
உன் சீற்றம்
விசித்திரமானது - அது
சுடு நெருப்பினால்
குளிரூட்டப்பட்ட
காதல் பரிசு...
கனல் கக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)